கோலம்/ Kolam

 

ஹைருன்னிஷா கசிம் மௌலானா, ஓஷீன் சிவா, பழனி குமார் மயில்ராஜ், ராக்கி மோல் செல்வராஜ்,

 கண்காட்சி நாட்கள் : ஜனவரி 9 - பெப்ரவரி 15,  வியாழன் -  சனி

நேரம்: காலை 10- மாலை 6

ப்ரைமரி அமைப்பின் கலை ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து வரும் ராகவி சின்னதுரையின் சமூக ஆய்வின் ஒரு பகுதி தான் இந்த கண்காட்சி . 

காலனி ஆதிக்க வாழ்வியலிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளை தமிழ் சமூக கலாச்சாரத்திற்குள் புதைந்திருக்கும் பழங்குடி மக்களின் படைப்பாற்றலான கோலம் கற்பிக்கும் முறைகளின் வழியாக ஆய்வு செய்வதே இந்த கண்காட்சியின் பிரதான நோக்கம் .

கண்காட்சியின் பெயர் கோலம். கலைஞர்கள் , சமூகம் , உள்ளூர் , உலகளாவிய புரிதல்கள் , நிறுவனம் ,கட்டமைப்பு , இயற்கை  என்று தனித்தனி புள்ளிகளாக இருப்பவைகளை இணைப்பது சாத்தியமா ? அப்படி இணைத்தால் அது என்ன வடிவத்தில் காட்சியளிக்கும் ?  இவையெல்லாம் இணைக்கக்  கூடிய கண்ணோட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் காண்பாரா ?

சமூக அடையாளங்களை தங்களுக்குள்ளே வரையறுத்து , மறு பரிசீலனை செய்ய கலைஞர்களான ஓஷீன் சிவா , பழனி ஸ்டூடியோவிலிருந்து பழனி, ஹைருன்னிஷா, மற்றும் ராக்கி மோல் செல்வராஜ் அழைக்கப்பட்டனர் . தீர்வுகளுக்குள் செல்லாமல் அனைவரும் சேர்ந்து  ஒரு கூட்டு பரிசோதனைக்குள் செல்வதற்கான ஒரு கருவியாக திகழ இந்த கோலம் கண்காட்சி விழைகிறது .

காலனியாதிக்க பிந்தைய தலித் மக்கள் மற்றும் தமிழ் பெண்களின் பண்முகத்தன்மையை பிரதிபலிக்க முயற்சி செய்கிறது இந்த கண்காட்சி . காலனியாதிக்க ஒடுக்குமுறையின் பல்வேறு நிலைகளையும் , அதை எதிர்த்த மக்களின் ஒற்றுமைக் குரலின் கூறுகளையும் சேர்த்து காண விழைகிறது  கோலம்.

உலகளாவிய தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உற்று நோக்கும் ஒரு முயற்சியாக இருக்கிறது .

'Art Fund ' என்ற நிறுவனம், ராகவியின் இந்த முயற்சிக்கு நிதி வழங்கியது.

 

இது இந்த கண்காட்சிக்கான ஒரு வழிகாட்டி . பல வடிவங்களை ஒன்றிணைத்து ராகவியால் எழுதப்பட்ட உரை இது.  விளக்கவுரையாக சில இடங்களிலும், சில இடங்களில் கவித்துவமாகவும் வெவ்வேறு வடிவத்தில் பயணிக்கிறது இந்த உரை . சில இடங்களில் நேரடியாக தனி நபர் உரையாடல் போன்ற  வடிவத்திலும் சில இடங்களில் கட்டுரைக்கான வடிவத்திலும் பயணிக்கிறது .

 

 

வருக வருக                                                                                             நடைபாதை

WELCOME

 

கோலம் ஒரு கண்காட்சி மட்டுமல்ல, ஒரு செயல், வாய்ப்பு , தேடல் .  உழைக்கும் தமிழ் பெண்களுக்கும் , விளிம்புநிலை சமூகத்திற்கும் தங்களின் குரலை பதிவு செய்ய கோலம் அழைக்கிறது .

 வாசலைத் தாண்டி, எல்லைகளை கடந்து , புராண ஆதி மனிதனை தகர்த்து , கோலத்தை அழி.

 நடைபாதையில் நுழைந்தவுடன் , இந்தியாவின் உழைக்கும் மக்களின் வாழ்வை அவர்களின் கிழிந்த காலணிகளின்   ஊடாக நம்முள் கடத்துகிறது பழனியின் 'To walk a Mile’ . மக்களின் உழைப்பையும், தினசரி போராட்டத்தையும் காலணிகள்  மூலம் காட்டுகிறது இந்த புகைப்படங்கள் . தன சொந்த கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் காலனி அணிய மறுக்கப்பட்டதின் நினைவுகளால் உந்தப்பட்ட இந்த புகைப்படங்கள் விளிம்புநிலை  மக்களின் வாழ்க்கை பயணத்தை பிரதிபலிக்கிறது .

 தரையில் உள்ள சிக்கு கோலமும் , எல்லைக் கோலமும் உங்களை வாசலைக் கடந்து சமூகத்தை பிரதிபலிக்கும் இடத்திற்கு வழி நடத்துகிறது .

 

அடையாளம்                                                                                                           வாசிப்பு அறை

FORM

 

இந்த அறையில் நாட்டிங்ஹாம் தமிழ் சமூகத்தின் குழந்தைகளின் கை  வண்ணங்கள் , படைப்புகள் நீல சுவற்றை அலங்கரிக்கிறது .  குழந்தைகளின் இந்த அழகிய சித்திரங்கள்  நம் சுவற்றை அலங்கரிக்க உதவியாக இருந்தது ‘நாட்டிங்ஹாம் தமிழ் குழுமம்’ என்ற அமைப்பு .புலம்பெயர்நத தமிழ் குழந்தைகளின் தேடல்களாக காட்சி அளிக்கின்றது இந்த படைப்புகள் . பாரம்பரிய இந்திய  நடனத்திலிருந்து டென்னிஸ் விளையாட்டு வரை , சமூக வலைத்தளங்கள் முதல் உடுத்தும் புடவை வரை இந்த சித்திரங்கள் தமிழ் மக்களின் பிரித்தானிய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது . இந்த சித்தரங்கள் ஏன் இங்கு இருக்கிறது ?

காரணம் நான் இங்கிருக்கிறேன், தஞ்சாவூர் வெண்கலம் இங்கிருக்கிறது,  திப்புவின் புலி இங்கிருக்கிறது , கோஹினூர் இங்கிருக்கிறது, எதை நிறுவுவதற்கு ?  என்ன சொல்கிறது இது ?

இந்த காலணிகள் , தமிழ் சமூக கலைப்  படைப்புகள் ,  இவை அனைத்தும் விளிம்புநிலை மக்கள் மற்றும் புலப்பெயர்ந்த மக்களின் குரல்கள்  சமகால தளத்தில் ஒளிப்பதற்கான வழிவகை செய்கிறது இந்த கோலம்.

இந்த கலை படைப்புகளின் வீடாக திகழ்கிறது கோலம் . இங்குள்ள ஒவ்வொரு படைப்பும் ஒரு கோலம், ஒரு வீடு , வீட்டிற்க்கான புதிய மொழி.

இந்த நீலசுவரின் மறுபக்கத்தில் உள்ள அலமாரியில் ராகவியின் பாட்டி அவருக்கு தந்த கோலம் பற்றிய புத்தகம் இருக்கிறது . கோலம் என்ற கலைப் படைப்பு பல தலைமுறைகளாக மக்களுக்குள் உள்ள அன்பையும் வாழ்வியல் முறையையும் கடத்திய ஒரு அற்புத விந்தை . இந்த கண்காட்சி அப்படி ஒரு விந்தையாக அமையுமா ?

 

1.

அழகு                                                                                                                        காட்சிக்கூடம் 1

BEAUTY

 

காலணிகள் மற்றும் கோலங்களை கடந்து வலது பக்கமுள்ள காட்சிக்கூடம் ஒன்றிற்குள் நுழையும்பொழுதே பழனி ஸ்டூடியோவின் புகைப்பட கலைஞர்களுடைய புகைப்படங்கள் கோல வடிவில் காட்சியளிக்கப்பட்டிருக்கிறது.

 

ஒவ்வொரு புகைப்படத்திற்கும் உள்ள இடைவெளி காலனியாதிக்க அழகியலை பிரதிபலிக்கிறதா ? இடைவெளி இல்லாமல் ஒன்று குவிந்திருக்கும் தன்மையே எதிர்ப்பின் குறீயீடாக இருந்தால் என்ன ? பழனிக்குமார் , எத்தனை முடியுமோ அத்தனை புகைப்படங்கள் காட்சிப்படுத்த வேண்டும் என்று விரும்பினார் .

சமூதாய பங்களிப்பின் அரசியலை பற்றிய உரையாடல் மட்டுமல்லாமல் ஒற்றுமையின் குறியீடாகவும் இந்த புகைப்படங்கள் இருக்க வேண்டும் . இடைவெளி மட்டும் அல்ல அழகு, ஒன்றாக சேர்ந்திருப்பதும் அழகு என்று வலியுறுத்துகிறது .

 இந்த புகைப்படங்கள் சமுதாயத்தில் உள்ள அடக்குமுறையும் சுரண்டலையும் பிரதிபலிக்கும் சின்னங்களாக இருக்கிறது .

எண்ணூர் எண்ணெய் கழிவு காட்சிகள் , கண்ணகி நகர் குடிபெயர்ப்புகள் , அனகாபுத்தூர் வெளியேற்றங்கள் , சென்னை வெள்ளம் போன்ற பல அரசியல் நிகழ்வுகளை காட்சி படுத்துகிறது இந்த புகைப்படங்கள் . இந்த பகுதியில் பழனி ஸ்டுடியோவிலிருந்து நூர் நிஷா மற்றும் ரவிக்குமார் அவர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கிறது .  PARI ( Peoples Archive of Rural India ) என்ற அமைப்புடன் பழனிக்குமார் ஆவணப்படுத்திய புகைப்படங்கள் தான் இவை.

வெவேறு தளங்களுக்குள் ஊடுருவி சென்று ஒரு முழுமைக்குள் அடங்காமல் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலை காட்சிப்படுத்துகிறது இந்த புகைப்படங்கள் .

இந்த புகைப்பட கதைகளை விவரமாக தெரிந்துக் கொள்ள கீழே உள்ள இணையதளத்தை பார்க்கவும் https://ruralindiaonline.org/en/authors/m-palani-kumar/

                                                            

 

2.

 நிறம்

 

நான் பழுப்பு நிறத்தில் இருக்கிறேன், அதனால் என்ன ? அதனால் என்னை என்னவென்று சொல்ல போகிறீர்கள் ? தமிழ்நாட்டுக்காரன் என்பீர்களா ? இல்லை தலித் என்பீர்களா ? நான் பழுப்பு நிறம் என்பதால் என்னை ஒரு வட்டத்திற்குள் அடைக்க போகிறீர்களா ? அல்லது என் பழுப்பு நிறத்திற்கு வெவ்வேறு பரிமாணங்கள் உள்ளதா ?

பழனிக்குமார் மற்றும்  ஹைருன்னிஷா இருவரும் அவர்களின் தாயின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை இங்கு பதிவிட்டிருக்கிறார்கள் . உழைக்கும் வர்கத்தை சேர்ந்த தமிழ் பெண்களான அவரகளின் உடலையே போராட்டம் மற்றும் உழைப்பின் குறியீடாக காட்சிப்படுத்தயிருக்கிறார்கள் . மீனவப்பெண்ணாகவும் வீட்டு வேலை செய்யும் பெண்ணாகவும் இருவேடம் பூண்டிருக்கும் தன் தாயின் தினசரி வாழ்வின் பதிவின் மூலம் தமிழ் பெண்களின் அசாத்திய மனவலிமையும் மென்மையான மனதையும் ஒருசேர காட்சி படுத்தியிருக்கிறார் பழனிக்குமார் .

இப்புகைப்படங்கள் நமக்கு தெரிவிப்பது என்ன ? ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசையில் இந்த புகைப்படங்கள் உழைப்பும், இன அடையாளமும் , பாரம்பரியமும் எப்படி இம்மக்களின் உடலை வடிமைக்கிறது என்பதையும், அதற்குள் புதைந்திருக்கும் படிமங்களின் வாயிலாக அந்த கலாச்சாரத்தின் எச்சங்களையும் நம்முள் கடத்துகிறது .

இங்கு  வெவேறு நிறங்களை நம்மால் காண முடிகிறதா ?  இந்த கோலங்கள் இடப்பட்டிருக்கும் மண்ணின் நிறமும் பழுப்பு , என் உடலின் நிறமும் பழுப்பு . இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதா ? இரண்டுமே புறக்கணிக்கப்பட்டு , வீழ்ந்து பின் ஒன்றாக எழுந்தவை தானே ?

 ஒன்றாக எழுவோம் .

 

3.

மாறுபட்ட நிறங்கள் இருக்கின்றதா ? சிகப்பு ..

அருங்காட்சியத்தில் தன் பங்களிப்பினை அளிக்க அழைக்கப்பட்ட ராக்கி மோல் , இந்த படைப்புகளின் சூழலில் ஒரு ஆப்பிளை வைத்தார்.

முதிர்ந்த அப்பிளின் சுருங்கிய , தோல் போன்ற அமைப்பை கவனித்த ராக்கி , இந்த பழத்தை தன் வாழ்க்கை கதையை சொல்லும் ஒரு கருவியாக உபயோகித்து ,  காலப்போக்கில் மாறிய  அடையாள சிக்கல்களையும் தன் பலவீனத்தில் உள்ள அழகான வலிமையும் உருவகபடுத்தினார் . வரலாற்றில் ஆப்பிள் பழம்  கலைஞர்கள் மற்றும் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன, ஆசை , அறிவு , புதுப்பித்தல் ஆகிய கருத்துருவாக்க சின்னமாக ஆப்பிள் திகழ்ந்து வந்தது . ஆதாம் ஏவாளின் தடைசெய்யப்பட்ட பழம் முதல் கிரேக்க புராணங்களின் அழியாத சின்னமாக திகழ்வது வரை , இந்த எளிய பழம் ஒரு நெடிய வரலாற்று மற்றும் கலாச்சார சின்னமாக திகழ்ந்து வருகிறது .

இந்த இரட்டைத்தன்மை , உணவையும் ஆபத்தையும் சேர்த்து குறிக்கின்றது ,  கால வரையற்ற மனித போராட்டம் மற்றும் அவனின் தீராத ஆசையையும் பிரதிபலிக்கும் சின்னமாக இருந்து வருகிறது.

ராக்கியின் படைப்புகளில் , இந்த ஆப்பிள் ஜாதியின் காரணமாக நிகழ்ந்த சமூக புறக்கணிப்ப்பை வெளிப்படுத்தும் சின்னமாக தொடர்கிறது . அன்பு மற்றும் சமத்துவத்தை புகைப்படங்கள் மூலம் நிலைநிறுத்தும்  கருவியாகவும் ஆப்பிள் தொடர்கிறது.  ஆப்பிள், சிலருக்கு கிடைக்கக்கூடிய மற்றும் பிறருக்கு மறுக்கப்படும் ஒரு பழமாக, உணவுரிமை மற்றும் பகுப்புரிமையின் சின்னமாக விளங்குகிறது.'

              

                           

4.

 

இந்த பகுதி பழனி மற்றும் ஹைருன்னிஷாவின் பத்திரிக்கைதுறை  வேலைகளை பிரதிபலிக்கிறது . இக்காட்சிகள் தனிமனித மற்றும் சமூக உழைப்பிற்குள் உள்ள ஒற்றுமையை காட்டுவதன் மூலம் மக்களின் தனிமனித மற்றும் சமூக வலிமையை பறைசாற்றுகிறது.

 

தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையில்  எல்லைகள் உள்ளதா ? கோலம் அந்த எல்லையை உடைத்து தனிமனித சமூக உறவை கேள்விக்குட்படுத்துகிறது .சேலை அணிவதும் , அணியாமல் இருப்பதும் அரசியலா ? சேலையின் மடிப்புக்குள் அரசியல் இருக்கிறதா ?

 

குழந்தையின் தொட்டிலாக மாறிய சேலை .

துறவைக்காடு பெண்களின் வீட்டு வேலை காட்சிகள் .

துப்புறவு தொழிலாளியான ரீட்டா அக்காவின் தெருநாய்க்களின் மீதான பாசம்.

எழில் அண்ணா , தெருக்கூத்து கலைஞர் , கோமாளியாக நடித்து தமிழ்நாட்டின் கிராம மக்களின் அன்பை பெற்றவர் .

சென்னையின் வானவில் சமூக அணிவகுப்பு காட்சிகள் .

அரசை எதிர்த்து செவிலியர்கள் நடத்திய போராட்டத்தின் ஓய்வு நேர துளிகள் .

 

இந்த புகைப்படங்கள் எளிய மக்களின் வேதனை, போராட்டம் , மகிழ்ச்சி ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது . 

அவள் வீட்டு வேலைகள் செய்கிறாள் .

அவள் பூட்டிய அறைக்குள் நடனமாடுகிறாள் .

அவர்கள் பொதுவெளியில் ஒன்றாக கைகோர்த்து செல்கிறார்கள் .

விடுதலைக்காக அவள் தன் கைகளை உயர்த்தி போராடுகிறாள் .

 

இந்த கண்காட்சி தேர்ந்து உருவாக்கப்பட்ட  ஒரு ஆவணம் . தமிழ் மக்களின் மொத்தத்தையும் ஓர் இடத்தில் காட்சிப்படுத்த முடியாத தோல்வியை பெருமையாகவும் அதன் வெற்றியாகவும் கருதுகிறது இந்த கண்காட்சி .

 

 

 

5.

கருவி

TOOL

கோலம் எனும் கலை , அரிசி மாவை வைத்து தரையில் வரையப்படும் வடிவம் . அரிசி மாவால் இடப்படுவதால் அது சுற்றுச்சூழலின்  நுண்ணுயிர்களுக்கும் , சின்ன சின்ன பூச்சிகளுக்கும் உணவாக அமைந்து இயற்கையுடன் ஒரு நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கலை .

தினமும் அழித்து மறுபடியும் இடுவதால் , இதன் நிலையற்ற தன்மை நிலைத்தன்மையையும், வாழ்வின் சுழற்சியையையும் பிரதிபலிக்கின்றது, காலத்தால் இயற்கையாகவே கரைந்துவிடுகின்றது.

பழனியின் படைப்புகள் நிகழ்கால தமிழ் மக்களின் வாழ்வியலையும், அடையாளத்தையும் , சமூக ஒற்றுமையையும் பிரதிபலிப்பது போல, ஓஷீனின் இந்த loop அனிமேஷன் எதிர்காலத்தை பிரதிபலிக்கின்றது .

 

இந்த வீடியோ வாழ்க்கையை , அதன் சமூக ஒற்றுமையை கொண்டாடுகிறது , தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மறைக்கப்பட்ட மகிழ்ச்சியை காட்டுகிறது . பெரிதும் கண்டுகொள்ளப்படாத விவசாய கூலிகளின் உழைப்பும் , தலித் வரலாறும்  தான் இந்த ஆராய்ச்சிக்கும் முக்கிய அடித்தளமாகிறது. அன்றாட வாழ்க்கையின் சுழற்சி , விவசாய அறுவடையின் சுழற்சியின் பார்வையில் பார்க்கும்பொழுது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள இணக்கமும் , சேர்ந்து இயங்கும் வலிமையும் வெளிப்படுகிறது .

 

இங்கு ஒலிக்கும் இசை, தமிழ் மக்களின் இறுதி சடங்கில் ஒலிக்கும் பறை இசை. இந்த இசை இறந்தவர்களின் வாழ்வினை போற்றும்  , வாழ்க்கை சுழற்சியை வலியுறுத்தும்.  இந்த பறை மாட்டு தோலினைக் கொண்டு செய்யப்படும் இசைக்கருவி. இந்த கருவியே மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் , மாட்டிறைச்சினை சுற்றி இயங்கும் இந்திய அரசியலையும் வெளிப்படுத்தும் . தனித்துவமான இந்த பறை இசை புறக்கணிக்கப்பட்ட மக்களின் ஓசையாக வும் அவர்களின் ஒற்றுமைக்  குரலாகவும் ஒலிக்கும் . ஒலிக்கும் இந்த இசை, இசைக்கலைஞர் மற்றும் ஆசிரியரான மணிமாறனும் அவரின் மாணவர்களும் சேர்ந்து புத்தர் கலைக்குழு என்ற ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது .

பறை இசையுடன் சேர்த்த  நீலக்கோடுகளான  அனிமேஷன் வீடியோ காட்சிகள் தலித் சமூகத்தின் ஒற்றுமையையும் , அந்த சமூகத்தின் மகிழ்ச்சியையும் கொண்டாடுகிறது . அவர்கள் வாழ்வியல் எப்படி இயற்கையுடன் ஆழமாக பிணைந்திருக்கிறது என்பதையும் , இறந்தவர்களின் பெருமையை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும்  இந்த பறை இசையுடன் கூடிய வீடியோ காட்டுகிறது.

 

எப்படி கோலத்தை கருவியாக கொண்டு இந்த புவியின் இயக்கத்தை புரிந்து கொள்கிறோமோ அதே போன்று இங்குள்ள மற்ற படைப்புகள் அனைத்தும் ஒரு தற்காலிக கோலமாக இயங்கி வெவ்வேறு காலகட்டங்களுக்குள் பயணித்து அதன் மூலம் தமிழ் சமூக பெண்கள் , மாற்றுபாலின மற்றும் தலித் அடையாளங்களை புரிந்து கொள்கிறோம்.

தரையில் உள்ள புத்தகத்தில் உங்களின் கோலங்களை பதிவிட்டு செல்லுங்கள் . உங்கள் எண்ணங்களையும் ஓவியங்களையும் எங்களுடன் பகிர்ந்து இந்த இயக்கத்தில் நீங்களும் ஒரு  பகுதி ஆவீர்களாக .

 

இணைந்ததற்கு நன்றி.

 

மொழி பெயர்ப்பு : தோழர் பாலாஜி